Archive for மே, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (2)

மாநாடு அழைப்பிதழ்

மாநாட்டில் பேசுபவர்கள்………

14-05-2023 – தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு: 14-05-2023 அன்று தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் சேலம் மாவட்டம் தியாகனூரில் பௌத்தர்கள் மறுமலர்ச்சி மாநாடு நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமை வகித்தார். தம்ம தர்மேந்திரா, கோ.பெரியசாமி, ஆதிராஜா, சா.ராம்ஜி, மூக்நாயக் மணி, காளிதாஸ், மணிகண்டன், இளையநந்தன், பி.பி.ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவாசல் அருகே தியாகனுாரில் பவுத்த மறுமலர்ச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: “தமிழகத்தில், 76 இடங்களில் புத்தர் சிலைகளுடன் கோவில்கள் உள்ளன. 2,500 ஆண்டுக்கு முன், உலகம் முழுதும் கடவுள் நம்பிக்கை, பிசாசு மூடநம்பிக்கை இருந்தது. கடவுள் நம்பிக்கையை பரப்பும் நிறுவனமாக மதம் உள்ளது. பவுத்த மதம் இருக்கும் இடத்தில் அறிவு உள்ளது. அம்பேத்கர் மேலும், 10 ஆண்டு உயிருடன் இருந்திருந்தால் பவுத்த மதம் வளர்ச்சி பெற்றிருக்கும். நல்லிணக்க கோட்பாடாக பவுத்தம் உள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். புத்தர் அவதார புர்ஷர் அல்ல, புஷ்யமித்ர சுங்கரால் தான் பௌத்தம் இந்தியாவில் வீழ்ந்தது, என்பதெல்லாம் அவரது பேச்சில் இருந்த முக்கியமான அம்சங்கள்.

பௌத்த ஊர்வலம், நடபடிகள்: இந்த மாநாட்டை முன்னிட்டு முன்னதாக புத்த பிக்குகள் மற்றும் சங்க ரத்தினர்கள், பவுத்த உபாசகர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான அணிவகுப்பு நடை பெற்றது. மேலும் மாநாட்டில் சங்க பேரவையின் மகாசங்ககாதிபதியாக அனைவரும் முன்னிலையிலும் முக்கோல் பெற்றுக் கொண்டு பிக்கு தம்மசீலர் பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து பிக்குகள் போதி அம்பேத்கர், புத்தபிரகாசம், தம்ம ரத்னா, ஜெயசீலர், குணசீலர், அமராவதி, தமிழ் கோவை, பவுத்தம் பாலா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டு மங்கள கங்கண நிகழ்வும் புத்த பூர்ணிமா நிகழ்வும் நடை பெற்றது. பௌத்தத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற நிலையில், இச்சடங்குகள் நிறைவேற்ற பட்டன. ஒருவேளை எஸ்.சிக்களை பௌத்தத்திற்கு மாற்ற, முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால், “நியோ பௌத்தம்,” என்று குறிப்பிடாமல் இருப்பதும் நோக்கத் தக்கது[1].  

செக்யூலரிஸத் தன்மையினை எடுத்துக் காட்டிய முயற்சி: இதைத் தொடர்ந்து விகார் கவுன்சில் செயலர் திருநாவுக்கரசு தலைமையில் போதிச்சந்திரன் வரவேற்பில் சிறுபான்மை நலகுழு உறுப்பினர்கள் பவுத்த பெருமாள், அம்பேத் ஆனந்த், சி. அழகர், தேவேந்திரன், கௌதம் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலையில் சர்வ மதத்தினரும் கலந்து கலந்துண்ட நிகழ்வு நடை பெற்றது. இதில் காஞ்சி ஜைனமட ஜினாலய பரிபாலகர் பட்டாராக சுவாமிகள், உத்தரப்பிரதேசம் பிக்கு நாகபூசனா, ஆந்திரபிரதேசம் நாகார்ஜுனா, போ தி ஆகியயோர் மகா சங்கதிபதி மற்றும் மகா சங்கத்தை வாழ்த்தி பே சினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள புத்தர் திருக்கோயில் நிர்வாகிகள், சங்கரத்தினர்கள், புத்த பூசகர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேடையில் வழிபாட்டு பொருட்கள் வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாட்டில் பவுத்த சுவடுகள் கருத்தரங்கம் நிகழ்வு மகாதினகரன் தலைமையில், எஸ் வசந்த் வரவேற்பில் நடைபெற்றது. இதில் தம்மதேவா, கோவைப் பிரியா, சிறை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் ஆதிக்கம்: ஜெர்மனி தமிழ் மரபு பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி, குந்தவை நாச்சியார், கல்லூரி இணை பேராசிரியர் சிவராமன், வரலாற்று ஆய்வாளர் அரகலூர் வெங் கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 மாவட்ட சிறுபான்மைநல உறுப்பினர்கள் மகாசங்க உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து பவுத்த மறுமலர்ச்சி மாநாடு ஒருங்கிணைப்பாளர் கவுதம சன்னா தலைமையில் நடைபெற்றது. மகா சங்க பொருளாளர் அரக்கோணம் கோவி. பார்த்திபன் வரவேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொ.திருமாவளவன். எம்.பி., காட்டுமன்னார் கோயில் எம்எல்ஏ., சிந்தனை செல்வன், மருத்துவர்கள் ராஜ்வர்தன், பெரியசாமி, சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் மகர பூசணம், மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை மகா சங்கத்தை வாழ்த்தி பேசினர். இறுதியாக சா. ராம்ஜி சாக்கியா நன்றி கூறினார்.

முரண்பட்ட அல்லது சேந்துள்ளவர்களின் சித்தாந்த நிலை: இப்படி இம்மாநாட்டில் ஏதோ பல இந்திய மாநிலங்களிலிருந்து, பல வெளிநாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள் போன்ற பிரமையை ஏற்படுத்த முயன்றாலும், அவரவர் தமது காரியங்களில் குறியாக இருந்தனர். திருமாவளவன் பேசி சென்றுவிட்டார்.   தேமொழி எழுதிய ‘ தமிழகத்தில் பௌத்தம்” நூல் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் சார்பில்(14.05.2023) சேலம் அருகே தியாகனூரில் நடைபெற உள்ள பௌத்த எழுச்சி மாநாட்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது. பௌத்த சங்கம் கூறியது, “நெடுநாளாய்த் தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்கள் குறித்த இந்துக்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லை யென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்து கொள்ளப் போவதில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, தன்னுதவி, தன் மேம்பாட்டுக்கான போராட்டம் அவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவு செய்துள்ளோம்.” பிறகு, நாராயணன் போன்றோர் எப்படி விசுவாசத்துடன் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. கோவிலும், இந்து கோவில் போலத் தான் கட்டியுள்ளார்கள். திருமா பார்த்தாரா என்று தெரியவில்லை.

விசித்திரமான நட்புக்குழு: கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் இவர்களின் தொடர்புகள், தமிழகத்தில் பல பேனர்களில் வேலை செய்வது, பரஸ்பர உதவி முதலியன பற்பல கேள்விகளை எழுப்புகின்றன. கௌதம சன்னா விசிக வின் பிரச்சார செயலாளர், பல அமைப்புகளில் பொறுப்பு என்று பட்டியல் காணப் படுகிறது[2].  மாநில செயலர் நீலசந்திரகுமார், முனைவர் கனல்விழி, பேராசிரியை சுந்தரவல்லி, செம்மலர், கௌதம சன்னா முதலியோர் கிருபா என்ற பெண் வழக்கறிஞர் விக்ரம் மீது ஏப்ரல் 2023ல் கொடுத்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க மே 2023ல் முதல் வாரத்தில் அமைக்கப் பட்ட குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். சுபாஷிணி மீது ஏற்கெனவே சிலர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இப்படி சர்ச்சைக்குர்யவர்கள் ஒன்றாக சேர்ந்து என்ன செய்கின்றனர் என்பதும் புதிராக உள்ளது. நாராயணன் கண்ணன் தன்னை ஒரு வைணவன் என்று காட்டிக் கொள்வார், ஆனால், இவர்கள் தூஷிக்கும் பொழுது கண்டுகொள்ள மாட்டார். தவிர, “மின் தமிழ்” என்ற குழுவில் இவர்கள் மற்ற பலருடன் நடு வைத்துள்ளனர். எல்லா விசயங்களையும் அலசுவர் பொதுவாக செக்யூலரிஸ, முற்போக்கு, மார்க்சீய, சித்தாந்திகள் போன்று காட்டிக் கொள்வர்..

கௌதம சன்னாபலவித பதவிகள், பொறுப்புகள், எழுத்தாளர் முதலியன: கௌதம சன்னாவைப் பொறுத்த வரையில் அரசியல்வாதி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தேர்தலிலும் நின்று தோற்றுள்ளது தெரிகிறது. “ஜெய் பீம் பவுண்டேஷன்’ போன்ற அமைப்புகள் வைத்திருப்பதும் தெரிகிறது.. இதனால், பௌத்தத்தை அரசியல் ரீதியில் உபயோகப் படுத்த முயலும் நிலையும் தெரிகிறது. அதனை அவரே விளக்கியுள்ளதை இங்கு படிக்கலாம்[3]. மற்றபடி “தலித்” என்ற பேனர்கள்-மேடைகள், புத்தகங்கள் எல்லாம் அம்பேத்கரை உபயோகப் படுத்தப் படும் முறையும் விளங்குகிறது. வழக்கம் போல திருவள்ளுவரையும் இதில் சேர்த்து குழப்பி, ஆராய்ச்சி என்று வறுத்தெடுப்பது, கிறிஸ்துவ பாணியும் புலப் படுகிறது. எனவே தலித்-கிறிஸ்துவ-பௌத்த இணைப்புகள் உள்ளதா இல்லையா என்று ஆராய வேண்டியதும் உள்ளது.

நாராயணன் கண்ணன் மற்றும் கௌதம சன்னா உறவுகள்: நாராயணன் கண்ணன் என்பவர், “பௌத்த சங்கத்தை அக்கறையோடு யாரும் மீட்டெடுக்காத தருணத்தில் திரு.கௌதம சன்னா தலைமையிலான ஓர் குழு பல்சமய ஆசீர்வாதத்துடன் நேற்று புத்த சங்கம் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு டயோசியஸ், முஸ்லிம்களுக்கு ஜும்மா, வைதீகர்களுக்கு மடங்கள், ஆதீனங்கள் இருப்பது போல் புத்த நெறிக்கு பௌத்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு எந்தவொரு தமிழக கட்சிகளும் ஆதரவுதராத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றதொரு சமயம் பௌத்தம் என டாக்டர் அம்பேத்கார் 20 வருட ஆய்விற்குப் பின் கண்டெடுத்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தபட்ட அனைத்துத் தமிழர்களின் சங்கமாக இது அமைகிறது. சவாலுள்ள இப்பெரும் முயற்சியை கௌதம சன்னா எனும் இளைஞர் எடுத்திருக்கிறார். அவரை பௌத்த அபிமானி எனும் அளவில் நான் வாழ்த்துகிறேன்,” என்று பேஸ்புக் 14-05-2023 பதிவில் குறிப்பிட்டுள்ளார். அன்று தியாகனூரில் நடந்த பௌத்த மாநாட்டில் சுபாஷினியுடன் கலந்து கொண்டிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  மதம் மாறினாலும் எஸ்.சிக்களுக்கு அச்சலுகைகள் தொடரும் என்று அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகளின் படி உள்ளது. அதனால், இதில் பிரச்சினை இல்லை.

[2] https://gsannah.wordpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/

[3] “ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா  by வல்லினம் • February 1, 2018; https://vallinam.com.my/version2/?p=4973

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (1)

மே 20, 2023

தியாகனூரில் நடந்த தமிழ்நாடு பௌத்தம மறுமலர்ச்சி மாநாடு இந்திய மதங்களை இணைக்கவா அல்லது பிரிக்கவா? (1)

தென்னிந்தியாவில் ஜைனம்பௌத்தம் குறைந்து வைணவம்சைவம் வளர்ந்து ஆதிக்கம் பெற்றது: பௌத்த மதம் தன்னுடைய ஹிம்சை-அஹிம்சை முரண்பாடுகளால், போலித் தனங்களால், இரட்டை வேடங்களால், வன்முறைகளால், வாணிக அடாவடித்தனங்களால், மோதல்களினால், போர்களால் இந்தியாவில் வெளிப்பட்டு, மக்கள் அதனை ஒதுக்கினர்[1]. போதாகுறைக்கு, இடைக்காலங்களில் ஜைன-பௌத்த மோதல்களில் பௌத்தம் பெரும்பாலாக சீர்குலைந்தது. ஜைன ஆதிக்கம் அதிகமாகிய நிலையில் பௌத்தம் ஒதுக்கப் பட்டது[2]. பிறகு தென்னகத்தில் வைணவம்-சைவம் கொஞ்சம்-கொஞ்சமாக பல்லவ காலத்திற்குப் பிறகு வளர்ந்த நிலையில், பௌத்தம் ஓரளவுக்கு முழுமையாக வெளிநாடுகளுக்குச் சென்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜைனம் உச்சத்தை அடைந்து தென்னிந்தியாவை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், வைணவம்-சைவம் சித்தாந்த மோதல்களில் தோற்க ஆரம்பித்தது. ஜைன அரசர்களின் வன்முறைகள் அவர்களது அஹிம்சை நெறிகளுக்கு முரணானது. முதல் நூற்றாண்டுகளில் தமிழக அழிவுகளுக்கு ஜைன களப்பிளர்களைச் சுட்டிக் கட்டியுள்ளனர். கல்வெட்டுகளும், ஜீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்களும் ஜைனர்களின் ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுகின்றன.

ஜைனபௌத்த சிலைகள் தெய்வசிலைகள் அல்ல, பூஜிக்கப் படவும் இல்லை: மக்களுக்குப் புரிந்தது. இதனால், ஜைனர்கள் இரட்டை வேடம் போட முடியவில்லை. தங்களது வியாபார மற்றும் வணிக முறைகளால் இந்தியாவிலேயே சித்தாந்தத்தை மாற்றிக் கொண்டு தழைக்க முயன்று வெற்றி கண்டது. ஜைன-பௌத்த மதங்கள் நாத்திக மதங்களாதலால், அவற்றின் கடவுள், கடவுளின் விக்கிரகம் என்றெல்லாம் இல்லை[3]. இதனால், மதத்தலைவர்களின் சிலைகள் ஒதுக்கப் பட்டன, மறக்கப் பட்டன. ஏனெனில், அவை பூஜிக்கப் படவில்லை. இதனால் தான் அத்தகைய சிலைகள் அங்கும்-இங்கும் வயல்களில், கிராமப்புறகளில், தொலைவான இடங்களில் கிடக்கின்றன. இதுபோல பல சிவலிங்கங்களும், மற்ற இந்துமத கடவுள், தேவதைகளின் சிலைகள், விக்கிரங்களும் அதிகமாகவே காணப் படுகின்றன[4]. இத்தகைய சிலைகள் காணப் படுவதற்கு மாலிக்காபூர், ஹைதர் அலி, திப்பு சுல்தான், வாலாஜா நவாப்புகள் முதலியோர் காரணம். இதை எந்த எழுத்தாளர்களும் முறையாக எடுத்துக் காட்டுவதில்லை.

2013ல்தியாகனூரில் புத்தர் கோவில் கட்டப் படுதல்: கேட்பாரற்று கிடந்த, ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலைக்கு, தனி கோவில் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள், கோரிக்கை விடுத்தனர்[5] என்று ஊடகங்கள் குறிப்பிடுவ்தை கவனிக்கலாம். அதையடுத்து, மெட்ராஸ் சிமென்ட், சிட்டி யூனியன் பாங்க், எஸ்.கே., கார்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் கம்பெனி நிறுவனங்கள் சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புத்த தியான பீடம் அமைக்க, கட்டுமான பணி நடந்தது[6]. மே 23 2013 அன்று தியான பீடத்தில், புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரத்தில் சிலைகள் கீழ்கண்டவாறு அம்மைக்கப் பட்டுள்ளன:

  • கிழக்கு (அ) கோயிலின் முன் பக்கத்தில்: புத்தர் உருவம்
  • தெற்கு : கண்ணனின் உருவம்
  • மேற்கு : திருமாலின் நரசிம்ம அவதாரம்
  • வடக்கு :கிருஷ்ண அவதாரம்

இங்கு புத்தரின் விக்கிரகம் ஒரு வைஷ்ணவ ஆச்சாரியார் போலவே உள்ளது. புத்தர் திருமாலின் அவதாரம் என்ற தவறான கருத்தினால் கண்ணன், நரசிம்மன் மற்றும் கிருஷ்ணன் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டாலும், அத்தகைய மாற்றத்தை வேண்டுமென்றே செய்தது இந்துக்களா, பௌத்தரா என்ற கேள்வியும் உள்ளது. இந்துக்களை மதமாற்ற பௌத்தர்கள் செய்த சூழ்ச்சி என்றும், இல்லை பௌத்தத்தை இந்தியாவிலிருந்து விரட்ட இந்துக்கள் செய்த சூழ்ச்சி என்றும் பரஸ்பர குற்றச்சாட்டு கூறுவது தெரிந்த விசயமே.

2023ல் பௌத்த மாநாடு நடத்த தீர்மானம்: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புத்த பூர்ணிமா விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பௌத்தர்கள் மற்றும் விஹார்களின் தலைமை மத அமைப்பின் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீட மேற்பு பிக்கு பிக்குகளின் சங்க பரிபாலன கங்கன மேற்புக்கான தமிழ்நாடு பௌத்தம் மறுமலர்ச்சி மாநாடிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கௌதம சன்னா அவர்கள் 14.05.2023 பகவான் தியாக புத்தர் திருக்கோயில் தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு தியாகனூரில் நடைபெற இருப்பதால் தமிழ்நாட்டின் ஆதி மதமான பௌத்தம் புத்தரின் காலத்திலும் அதற்கு பிறகும் தமிழகத்தில் பரவி செழித்திருந்தது.  பெரும்பாலான தமிழர்கள் பௌத்தம் தழுவி இருந்த நிலையில் சாம்ராட் அசோகரின் காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஏராளமான பௌத்த புனித தலங்கள் உருவாக்கினார். பௌத்தத்தை பின்பற்றிய தமிழ் அரசர்கள் அறநெறிப்படி ஆட்சி புரிந்தனர் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்தம் செழித்தோங்கியிருந்தது.அக்காலகட்டத்தில் பௌத்தத்தை பரப்பும் ஒருங்கிணைக்கவும் தலைமை பௌத்த சங்கம் செயல்பட்டது. அதற்கு தலைமை பிக்குவும் மற்ற நிர்வாகிகளும் பௌத்த மார்க்கத்தை நிர்வகித்தனர். இவர்களின் நிர்வாகத்தின் கீழ் விகாரைகள்  எனப்படும் பிக்கு பிக்குனி மடங்களும் புத்தரின் பாதையை பின்பற்றுவதை நினைவுறுத்தும் அவரின் பாத பீடிகைகளை  வழிபடும் முறையும் தமிழகத்தில் பரவலாக இருந்தன. ஆனால் 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த பிக்கு பிக்குனிகள் பேரவை  மறைந்தது. தமிழர்களின் ஆதிமதமான பெளத்தம் தமிழ்நாட்டில் அழிந்துபோனது.

தமிழகத்தில் பௌத்தத்தின் நிலை: பௌத்தம் அளிக்கப்பட்டு 700 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் பண்டிதர் அயோத்திதாசரும் இந்தியா அளவில் அனகாரிக தர்மபாலா மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் பௌத்தத்தை மீட்டெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக 800 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் மகா சங்காதிபதி தலைமையில் பிக்கு பிக்குனிகள் நிர்வாகத்தில் தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பாகவும் தலைமை சங்கமாகவும் மீண்டும் எழுகிறது பௌத்தம். அதற்கான விழா தான் மகா சங்காதிபதியின் மகா மங்கள சங்க பீடமேற்பு மற்றும் பிக்கு பிக்குனிகளின் சங்க பரிபாலன கங்கன மேற்பு விழா நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு பௌத்த மறுமலர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது என்பது சிறப்பு மிக்கதாகும். இந்த மாநாட்டில்  அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து மத தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பௌத்த சங்கப் பேரவை மகா சங்காதிபதி வணக்கத்திற்குரிய பிக்கு தம்மசீலர், வணக்கத்திகுரிய பிக்கு போதி அம்பேத்கர் மற்றும் பிக்குகள், மகா சங்க செயலாளர் ஆர். திருநாவுக்கரசு, பொருளாளர் பார்த்திபன், தமிழக முழுவதிலும் உள்ள புத்த விகார் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு புத்தசங்கா கவுன்சில் துணைச் செயலாளர் எஸ் வசந்த், பால்ராஜ், ரகு, செந்தில், சந்திரசேகர், சரவணன்,மற்றும் அமைப்பு நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

© வேதபிரகாஷ்

20-05-2023.


[1]  இதைப் பற்றி முன் தமிழில் விவரமாக சுமர் 200 பக்கங்களுக்கு எழுதியுள்ளேன். ஆக, இவை இந்த குழுக்களுக்கு – கௌதம சன்னா, சுபாஷிணி டிரம்மெல் / கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் முதலியோர்களுக்கு தாராளமாகவே தெரியும்.

[2] 788-CEல் தோல்வியடைந்த பௌத்தர்களை கொல்லாமல், இலங்கைக்கு நாடு கடத்தியதை கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ளன.

[3]  பௌத்தர்களின் ஸ்தூபம், விகாரம் முதலியவை கோவில்கள் அல்ல, சிதை-அல்லது இறந்தவர்களில் எச்சங்கள் மீது நினைவாகக் கட்டப் பட்ட கட்டிடங்கள் ஆகும். சிலைகளும் பிற்காலத்தில் வைக்கப் பட்டன.

[4]  இவையெல்லாம் சைவ-வைணவ மோதல்களில் உண்டானவை போன்று சித்தரிக்கப் படுகின்றன, ஆனால், அவை ஜைன-பௌத்தர்களால், பெரும்பாலும் துலுக்கர்களால் கோவில்கள் இடித்துத் தள்ளப் பட்டு விட்டுச் சென்ற மீதிப் பொருட்களே.

[5] தினமலர், ஆத்தூர் அருகே 5ம் நூற்றாண்டு கால புத்தர் சிலை பிரதிஷ்டை, பதிவு செய்த நாள்: மே 24,2013 03:52

[6] https://m.dinamalar.com/detail.php?id=720040